website loader
×

கே.டி.கே. தங்கமணி - திருமங்கலத்தில் பிறந்த பொதுவுடைமைவாதி

திருமங்கலம்: இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவராகவும்., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் மற்றும். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் இருந்த கே.டி.கே. தங்கமணி, (மே 19, 1914 - டிசம்பர் 26, 2001)) மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தவர்.

திருமங்கலம் பெருவணிகர் கே.டி. கூளையநாடார் - காளியம்மாளுக்கு 1914ம் ஆண்டு மே 19ம் நாள் இரண்டாவது மகனாக கே.டி.கே. தங்கமணி பிறந்தார். கே.டி. கூளைய நாடார், பெரும் செல்வந்தர், ஏற்றுமதி, இறக்குமதி வணிகர். இவரும் ஈ.வெ.ரா. பெரியாரின் தந்தையும் கூட்டாக வணிகம் செய்து வந்தவர்கள்.

கே.டி.கே. தங்கமணியும் இந்திராகாந்தியும் இலண்டனில் ஒன்றாய் சட்டம் படித்தவர்கள்

தங்கமணி, தனது பள்ளிப் படிப்பை பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ. கணிதம் முடித்தார். (அக்காலங்களில் கணித பட்டயபடிப்பபிற்கு எம்.ஏ. தான் வழங்குவர்). பட்டய படிப்பு முடிந்த தருவாயில் இவரது தந்தையார் காலமாக, அவர் மேற்கொண்டு வந்த வணிகத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆனால் இவருக்கு இலண்டன் சென்று பாரிஸ்டராக (Bar at Law) வேண்டும் என ஆசை. அவரது வீட்டில் உள்ளோர் மறுத்தனர். ஆனால் இவர் விட்டுக்கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் வீட்டுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்கவே, அவரது அண்ணன் சின்னமணி நாடார், தாயாரை சமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ளவைதார். ”படிப்பை பாதியில் நிறுத்தித் திரும்பக்கூடாது; படிப்பு முடியும் வரை திருமணம் செய்யக்கூடாது” போன்ற நிபந்தனைகளுடன் 1935ம் ஆண்டு சட்டம் படிக்க இலண்டன் புறப்பட்டார் தங்கமணி. இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படிப்பை முடித்து, இலண்டன் மிடில் டெம்பலில் சட்டம் படித்து முடித்தார். இவரும் இந்திராகாந்தியும் ஒன்றாய் சட்டம் படித்தவர்கள். கல்லூரியில் படிக்கும் போது கால்பந்து மற்றும் ஹாக்கி போன்றவற்றில் சிறந்து விளங்கினார். கல்லூரி அணிக்காக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஹாக்கி தொடர்கள் பலவற்றில் வென்றுள்ளார்.

1939 ஆண்டில் பாரிஸ்டர் பட்டம் (Bar at Law) பெற்று தாயகம் திரும்பி, சென்னை பார் கவுன்சிலில் தன்னை வக்கீலாக பதிவு செய்து கொண்டார். சிங்கப்பூரில் வக்கீலாக இருந்த சி.ப. ஆதித்தனார் (தினத்தந்தி) தனக்கு உதவ ஓர் இளைஞர் தேவைப்பட்டார். அவர் சென்னை வந்தபோது தங்கமணியை சந்தித்து, 1940ல் ஆதித்தனாருடன் சிங்கப்பூர் கிளம்பி அங்கு வக்கீல் தொழிலை துவங்கினார். இவரது துடிப்பும் திறமையும் வியந்து சி.ப. ஆதித்தனாரின் மாமனார் இராமசாமி நாடார் தனது இரண்டாவது மகளான வள்ளியம்மையை கே.டி.கே. தங்கமணிக்கு திருமணம் செய்து வைத்தார். மூன்றாண்டுகள் சிங்கப்பூரில் இல்லறமும், வழக்கறிஞர் தொழிலும் சிறப்புற்று இருந்தது. இரண்டாம் உலகப் போர் இன் இறுதிக்கட்டம். சிங்கப்பூரை ஜப்பான் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில் தமிழர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பினர். கேடிகே குடும்பம், தனது மாமனாரின் சொந்த ஊரான ராமநாதபுரம், மணச்சையில் தங்கினா். வெள்ளையனே வெளியேறு போராட்டம் கனல் வீசிக்கொண்டிருந்த நேரம் அது. திருவாடானையில் போராட்டம் செய்த மக்களை ஆங்கிலேய காவலர்கள் சுட்டனர். 49 பேர் இறந்தனர். எஞ்சியிருந்தவர்களை சிறையில் அடைத்தனர். அவர்களுக்காக முதன்முறையாக பணம் வாங்காமல் வாதிட்டார் கே.டி.கே..

1945 இறுதியில் மதுரையில் வழக்காடத் துவங்கினார். கலாச்சாரக் கழகம் எனும் ஒன்றை நிறுவினார். அதன் கூட்டங்களுக்கு அண்ணல் அம்பேத்கர், எஸ்.ஏ.டாங்கே, திரு வி.க. உள்ளிட்ட பல தலைவர்களை அழைத்து வந்து பேசச் செய்துள்ளார். ரவீந்திரனாத் தாகூர் ‘சோவியத் நண்பர்கள் சங்கம்’ எனும் அமைப்பைத் துவக்கியபோது அதன் மதுரைக் கிளைக்கு தலைவராக பொறுப்பேற்றார் கே.டி.கே. சோவியத் நண்பர்கள் சங்கத்தின் சார்பில், மதுரை புதுமண்டபத்தில் போர் பற்றிய கண்காட்சியை நடத்த இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. சங்கத்தின் மாநிலத் தலைவரான திரு வி க இதற்காக மதுரை வந்து கேடிகேயுடன் ஒரு வாரம் தங்கியிருந்தார். சென்னையில் பல தொழிற் சங்கங்களைத் துவக்கி நடத்தி வந்த திரு வி க, அந்த அனுபவங்களை விளக்கினார். ”பணம் சம்பாதித்துத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற் நிலையில் இல்லாத நீங்கள், பொது வாழ்க்கைக்கு வரவேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார். அதன்படி அவரும் களத்தில் இறங்கினார். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்டான சிங்காரவேலரை சந்திக்கும் வாய்ப்பு கேடிகேவுக்குக் கிடைத்தது. திரு வி.க.வுடன் இணைந்து சென்னையில் தொழிற்சங்கங்களைக் கட்டும் பணியில் சிங்காரவேலர் ஈடுபட்டிருந்தார். சிங்காரவேலரின் தொடர்புக்குப்பின் 1943ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். மதுரையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 1947 மற்றும் 1948 ஆண்டுகள் (மதுரை டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹார்வே மில்) போராடிச் சிறை சென்றார் கே.டி.கே.

கல்வி இருந்தும் பணிவு கொண்டார் - செல்வம் இருந்தும் எளிமை கொண்டார்
வீரம் இருந்தும் விவேகம் கொண்டார் - குணத்தில் தங்கமானார்
கொள்கையில் நிறைகுடமானார் - கதராடை மட்டுமே அணிவார்
காலுக்கு செருப்பின்றி நடப்பார். - கருப்பட்டிக்காப்பி குடிப்பார்
செல்வ செழிப்பில் பிறந்திருந்தாலும் - செல்லம் சோப்பில் துணி துவைப்பார்.

ஆளவந்தார் (ஓயாது உழைத்த உத்தமர்)


1957ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றியும் பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சி முதன் முறையாக மதுரையில் வெற்றி பெற்றது. இவரது தலைமைப் பண்புகள் மற்றும் நற்குணங்களால் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவராக பொறுப்பேற்றார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச கொள்கைகள் இன்றளவும் இருப்பதென்றால் அது இவரால் தான். தன் 88ஆவது வயதில் 2001 டிசம்பர் 26 அன்று கோவையில் மரணமடைந்தார். இவரது நினைவாக, மதுரை அண்ணாநகா் மற்றும் அச்சம்பத்திலுள்ள ஒரு தெருவிற்கும் மற்றும் திருமங்கலத்திலுள்ள ஒரு சந்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. இவர் கோவையில் வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இவரது வாழ்க்கையைப்பற்றி ஓயாது உழைத்த உத்தமர் என்ற நூலை ஆளவந்தார் எழுதியிருக்கிறார்.

படம் & தகவல்: மூர்த்தி மலையாண்டி


தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top