website loader
×

கால் நூற்றாண்டாக வறண்ட குண்டாறு பிற ஆறுகளோடு இணைக்கப்படுமா

திருமங்கலம் : மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி 300 கி.மீ., தூரம் ஓடி இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் கடலில் கலக்கும் குண்டாறு பல ஆண்டுகளாக வறண்டு கிடப்பதால், இதனை வேறு ஆறுகளுடன் இணைப்பதற்கான ஆய்வுகள் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

குண்டாற்றுப் பகுதிகளை தூர்வாருவதாக கூறி ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுவருகிறது. இதற்கு மாறாக இந்த குண்டாற்றினை மற்ற நதிகளுடன் இணைப்பது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரமான புதுப்பட்டியில் சிறிய நீரோடை போல் தொடங்குகிறது குண்டாறு. தொடர்ந்து அசுவமா ஆறு, தொட்டப்பநாயக்கனூர் வாய்க்கால், கருக்கட்டான்பட்டி ஓடை, கிண்ணிமங்கலம் ஓடை, வாகைக்குளம் ஓடை என பல ஓடைகள் இணைந்து சாத்தங்குடியில் பிறக்கிறது குண்டாறு.
இங்கிருந்து திருமங்கலம், கமுதி என 300 கி.மீ., தூரம் ஓடி இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் கடலில் கலக்கிறது. இடையில் தெற்காறு, கவுண்டா ஆறு, கமண்டல ஆறு, கானல்ஓடை, வேம்பாறு, பாலாறு, உத்திரகோசமங்கை ஓடை, கிருதுமால் ஆறு ஓடையின் ஒரு பகுதி என 50க்கும் மேற்பட்ட கிளை ஓடைகள் வந்து சேருகின்றன. குண்டாறு சில இடங்களில் 80 மீட்டர், பல இடங்களில் 120 மீட்டர் வரை பரந்து உள்ளது. ஆனால் 5 முதல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் பலத்த மழையில் ஓரிரு நாள் தண்ணீர் செல்வதோடு சரி. மற்றபடி குண்டாற்றில் தண்ணீர் ஓடி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது என பொதுப்பணித்துறையின் கணக்கு சொல்கிறது. இந்த குண்டாற்றின் நீர் மூலம் நிறையும் கண்மாய்களின் எண்ணிக்கை பல ஆயிரம். அதேபோல் பாசன நிலங்களின் எண்ணிக்கை பல லட்சம் ஏக்கர். அனைத்தும் 50 ஆண்டாக வறண்டு கிடக்கிறது.இந்த வறண்ட கணக்கினை நிர்வகிக்க பொதுப்பணித்துறையின் 5 துணைப் பிரிவுகள் உள்ளன. அரசு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50 கோடிக்கு மேல் செலவிட்டு வருகிறது. இதில் தூர்வாருவதாகக் கூறி ஒவ்வொரு துணைப் பிரிவுகளுக்கும் ஆண்டிற்கு 3 முதல் 4 கோடி ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்போது துணை ஆறுகள் தூர்வாரவும், அழிந்து போன ஆறுகளை மீட்கவும் ஒவ்வொரு துணைப் பிரிவுகளுக்கும் 5 கோடி வரை ஒதுக்கீடு செய்துள்ளது. இப்படி ஒதுக்கப்படும் நிதிகள் வீணடிக்கப்படுகிறது என்பதை இதற்கு முன்னர் நடந்த பணிகளிலும், தற்போது நடந்து வரும் பணிகளிலும் நேரடியாக காண முடிகிறது. தவிர இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தும் குண்டாற்றினை மீட்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இப்படி நிதிகளை வீணடிப்பதை தவிர்த்து, இந்த நிதிகளை ஒருங்கிணைத்து குண்டாறு வறண்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து, காரணத்தை கண்டறிய வேண்டும். அதனை சரி செய்து, இந்த நிதியை பயன்படுத்தி நதிநீர் இணைப்பு திட்டத்தில் குண்டாற்றினை மற்ற நதிகளுடன் இணைக்க உள்ள வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய அரசு முன்வர வேண்டும், என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செய்தி: தினமலர்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top