website loader
×

வாழை தென்னந்தோப்புகளை அழித்து பிரம்மாண்ட மதுரை துணைக்கோள் நகரம்

திருமங்கலம் : மதுரை துணைநகரம் அமைக்க வாழை, தென்னை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

மதுரை நகரின் துணைநகராக திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி, தோப்பூர் ஊராட்சி களில், 573.57 ஏக்கர் பரப்பளவில் துணைநகரம் அமைக்கப்படும் என கடந்த 2013ல் தமிழக அரசு அறிவித்தது. இதன் படி உச்சப்பட்டி ஊராட்சியில் 521.26 ஏக்கர், தோப்பூர் ஊராட்சியில் 52.57 ஏக்கர் பரப்பில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த 2 ஊராட்சிகளிலும் 1982ல் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலங்கள் எடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் 2 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவற்றின் தற்போதைய மதிப்பு பன்மடங்கு உயர்ந்து விட்டதால் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு தர வேண்டுமென உச்சப்பட்டி கிராம உழவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடந்து வருகிறது. மீட்கப்படும் இடங்கள் விளைநிலங்களாக இருப்பதால் உழவர்கள், அதிகாரிகளுக்கு இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.

இதற்கிடையே உச்சப்பட்டியில் பாஜ மாநில நிர்வாகி சுரேந்திரன், அவரது சகோதரர்கள் மகேந்திரன், இரவீந்திரன், இராமநாதன் ஆகியோர் உழவு செய்து வந்த 72 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் நேற்று வந்தனர். உசிலம்பட்டி ஆர்டிஓ சுகன்யா, திருமங்கலம் தாசில்தார் இராமகிருஷ்ணன், ஏடிஎஸ்பி நரேந்திரவர்மன், டிஎஸ்பிக்கள் திருமால் அழகு, இராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்த்துறையினர் குவிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியது. இதற்கு சுரேந்திரன் மற்றும் உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 2,500 வாழை மரங்கள், 250 தென்னை மரங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் வேரோடு பெயர்த்து எடுக்கப்பட்டது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட பயிர்களையும் அழித்து நிலத்தினை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

இதுகுறித்து உழவர் மகேந்திரன் கூறியதாவது, ‘‘பரம்பரையாக இந்த நிலத்தில் உழவு செய்து வருகிறோம். தென்னை, வாழைகளோடு, சோளம் 13 ஏக்கர் குதிரைவாலி 13 ஏக்கரில் பயிரிட்டிருந்தோம். உயர்நீதிமன்ற உத்தரவு எனக்கூறி எந்தவித முன்னறிவிப்புமின்றி உழவர் நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தி கொண்டனர். நீதிமன்றம் எங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தந்துள்ளது. அதற்குள் வீட்டு வசதி வாரியத்தினர் அவசரப்பட்டு விளைநிலங்களை அழித்து விட்டனர். இதற்கு உரிய இழப்பீடு தரவேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்,’’ என்றார்.

இது குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கடந்த 1982 - 83ல் வீட்டுவசதி வாரியத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி நிலத்தை பெற்றோம். தொடர் நடவடிக்கை இல்லாததால் உழவர்கள் விளைநிலங்களை பயன்படுத்தி வந்தனர். தற்போதைய இட மதிப்பின்படி இழப்பீட்டை உழவர்கள் உயர்த்தி கேட்டு வருகின்றனர். பலர் வழக்கும் தொடர்ந்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய உத்தரவுப்படி, நேற்று நிலத்தை கையகப்படுத்தினோம்,’’ என்றார்.
செய்தி: தினகரன்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top